செய்திகள்

தேனி அருகே கிணற்றில் குதித்து தாய்-மகள் தற்கொலை

தேனியில் 4 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

தேனி:

தேனி கே.ஆர்.ஆர்.நகர் 12-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சரஸ்வதி(வயது32). இவர்களுக்கு ஹர்சிதா என்ற 4 வயது மகளும், 4 மாத குழந்தையும் உள்ளது. ஜெகன் மஸ்கட்டில் வேலை செய்து வந்ததால் சரஸ்வதி குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தனது மகளுடன் வெளியே சென்றார்.

அதன்பின்பு வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இன்று காலை தேனி பத்ரகாளியம்மன் கோவில் அருகே கிணற்றில் காணாமல் போன சரஸ்வதி மற்றும் குழந்தை ஹர்சிதா பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேர் உடலையும் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணையில் சரஸ்வதி கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டது போல் இருந்துள்ளார்.

நேற்று குழந்தையுடன் பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பின்பு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.