ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடையை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்த கீர்த்திகா (வயது 20) என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையில் கீர்த்திகா கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே முருகன் மற்றும் உறவினர்கள் அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
வலியால் துடித்த கீர்த்திகாவுக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அடுத்தடுத்து கீர்த்திகாவும், கருவில் இருந்த சேயும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த தகவல் அறிந்த முருகன், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கீர்த்திகா உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
தாய்-சேய் இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியம் தான் எனக்கூறி உறவினர்கள், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.