செய்திகள்

உலகிலேயே மாசு அதிகமான நகரமாக டெல்லி தேர்வு

உலகில் உள்ள தலை நகரங்களில் மிக மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டெல்லி தேர்வாகி உள்ளது. #India #Pollution #Gurgaon #Gurugram

மாலை மலர்

உலகில் மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் மற்றும் நகரங்கள் எவை என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வு முடிவு இன்று ஜகார்தாவில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

உலகில் உள்ள தலை நகரங்களில் மிக மிக மோசமாகவும், அதிகமாகவும் மாசு ஆக்கிரமித்த நகரமாக டெல்லி தேர்வாகி உள்ளது. டெல்லி புறநகரங்களில் குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் ஆகிய நகரங்களும் அதிகம் மாசு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகிலேயே டெல்லி மண்டலம் மிக மிக மாசு படிந்ததாக உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் உருவாகும் மாசு பற்றி ஆய்வு செய்யப்பட்டதில் இந்த அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன.

உலகில் அதிக மாசு கொண்ட முதல் 10 நகரங்களில் 7 நகரங்கள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் 10 இடங்களில் பாகிஸ்தானில் உள்ள பைசாலாபாத் நகரமும் ஒன்றாக தேர்வாகி உள்ளது.

தென்னிந்திய நகரங்களை விட, வடஇந்திய நகரங்கள்தான் அதிக மாசு அபாயம் கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய நகரங்களில் மாசு அபாயம் அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை சீன தலைநகர் பீஜிங்கில்தான் அதிக மாசு அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. தற்போது பீஜிங் நகரம் சுகாதாரம் ஆகி வருவதாக தெரிகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மாசு அபாயம் மக்களை பாதிக்கும் அளவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.