புதுடெல்லி:
ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைகளை விதித்தால், ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு அளித்தது.
கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ஓ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர், தன்னுடைய உறவினர்கள் சிலரின் துணையுடன் அவருடைய மனைவி இந்திரா காந்தி மற்றும் அவருடைய ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 8 பேரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு, முத்துராமலிங்கம் மற்றும் அவருடைய உறவினர்கள் 19 பேர் 8 ஆயுள் தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். நான்கு பேரை மட்டும் விடுவித்து முத்துராமலிங்கம் உள்ளிட்ட 16 பேருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனை ஐகோர்ட்டால் உறுதி செய்யப்பட்டது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2009-ம் ஆண்டில் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 16 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
குற்றவாளிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் ஆஜராகி வாதாடினார். அவர் தன் வாதத்தில், 'ஒரு மனிதருக்கு எட்டு ஆயுள் கிடையாது. ஆயுள் ஒன்றுதான். அப்படி இருக்கும் போது ஒரு மனிதன் எப்படி எட்டு முறை ஆயுள் தண்டனை அனுபவிக்க முடியும்? மேலும் நீதிபரிபாலனம் என்பது ஒரு குற்றவாளியை திருத்துவதற்குத்தான். ஆனால் ஒரு குற்றவாளி விடுதலை பெறுவதற்கு வாய்ப்பே இல்லாத வகையில் தொடர்ச்சியாக சிறை தண்டனை அனுபவிப்பது நீதிபரிபாலனத்தை கேள்விக்கு உரியதாக்கி விடும்' என்று கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைகளை விதிக்கும்போது அந்த தண்டனைகளை தொடர்ச்சியாக நிறைவேற்றக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். இதுபோன்று அடுக்கடுக்காக ஒரே நேரத்தில் தண்டனை அளிப்பதால் ஒரு குற்றவாளிக்கு சம்பந்தப்பட்ட அரசாங்கம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலை அளிக்கலாம் என்ற வாய்ப்பை அது பறித்து விடுகிறது.
ஒரு மனிதனுக்கு இரட்டை மற்றும் அதற்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைகளை வழங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகிறது. ஒரு மனிதனுக்கு மற்ற உயிர்களைப் போல ஒரு ஆயுள் மட்டுமே உள்ளது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனை என்பதை ஒருவர் ஒன்றன்பின் ஒன்றாக இல்லாமல், ஏக காலத்தில் மட்டுமே அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட ஆண்டு தண்டனையையும், ஆயுள் தண்டனையையும் ஒரே வழக்கில் விதிக்கலாம். அப்போது, முதலில், குறிப்பிட்ட ஆண்டு தண்டனையை அனுபவித்து விட்டு, பிறகு ஆயுள் தண்டனையை அனுபவிக்குமாறு கூறலாம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.