செய்திகள்

உ.பி. பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் எட்டா நகரில் கஸ்தூரிபா காந்தி பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் வழக்கம்போல் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் பல மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒருவர்  பின் ஒருவராக வாந்தி எடுத்தனர்.

இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சாப்பிட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.