செய்திகள்

பிலிப்பைன்சில் ‘டெம்பின்’ புயல் ருத்ர தாண்டவம்: பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியது

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட டெம்பின் புயலின் ருத்ர தாண்டவத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

மாலை மலர்

மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘டெம்பின்’ புயல் காரணமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக தெற்கு பிலிப்பைன்சின் மின்டானவ் மாகாணத்தில் இந்தப் புயல் ருத்ர தாண்டவமாடி விட்டு கரையைக் கடந்துள்ளது. டுபோத், பியாகபோ ஆகிய இருநகரங்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இங்கு வீடுகள் பலவும் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன.

புயல், மழை, நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் இதுவரை 200 பேருக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 160க்கு மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு சேவை முடங்கி விட்டது. தன்னார்வ தொண்டர்கள் இடிபாடுகளைத் தோண்டி உடல்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் ‘கய்டாக்’ புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திய சுவடு மறைவதற்குள்,  இப்போது ‘டெம்பின்’ புயல் பெரும் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தி இருப்பது பிலிப்பைன்ஸ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.