செய்திகள்

தினகரன் அணிக்கு மேலும் எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்: எம்.எல்.ஏ. ரெங்கசாமி நம்பிக்கை

தினகரன் அணிக்கு மேலும் எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என ரெங்கசாமி எம்.எல்.ஏ.கூறினார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. ரெங்கசாமி தினகரனுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில் தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் நாங்கள் யாருடைய கட்டாயத்திலும் தங்கி இருக்கவில்லை. எங்களது சொந்த விருப்பத்தில், சொந்த பணத்தை செலவழித்து தங்கி இருக்கிறோம்.

அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும். அதேநேரத்தில் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.

எங்களது அணிக்கு இன்னும் கூடுதல் எம்.எல்.ஏ.க்கள் வர வாய்ப்பு உள்ளது. நாங்கள் புதுச்சேரியில் இருந்தாலும் மக்கள் பணி ஆற்றி கொண்டு தான் இருக்கிறோம்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காகவும், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும் ஒரே இடத்தில் தங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.