அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் மேலும் 47 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை அந்த அணி சார்பில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 632 பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இரு அணியினரும் தங்களுக்கு ஆதரவான கட்சி நிர்வாகிகளின் பிரமாண பத்திரங்களை தலைமை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்து வருகிறார்கள்.
இந்த பத்திரங்கள்தான் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு வலுவான ஆதாரங்களாக கருதப்படுகிறது. இதனால் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வதில் இரு அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் நேற்று மேலும் 47 ஆயிரத்து 151 பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டன. அ.தி.மு.க. வக்கீல் ராகேஷ் சர்மா இந்த பத்திரங்களை ஒப்படைத்தார்.
இதையும் சேர்த்து அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் மொத்தம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 632 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.