ரெயிலில் அடிபட்டு இறந்த போலீஸ்காரர் பவுன்ராஜ் 
செய்திகள்

மொரப்பூர் அருகே சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர்- லாரி டிரைவர் ரெயிலில் அடிபட்டு பலி

மொரப்பூர் அருகே, ரெயில் தண்டவாளத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் மற்றும் லாரி டிரைவர் இறந்து கிடந்தது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

கம்பைநல்லூர்:

தர்மபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 30). சென்னை ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம், ஒமலூரைச் சேர்ந்த சவுமியா (26) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு சேலம்–சென்னை ரெயில் வழித்தடத்தில், மொரப்பூர் ரெயில்வே ஸ்டே‌ஷன் அருகே உள்ள தண்டவாளத்தில் பவுன்ராஜ் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக ரெயில் மோதியதில் உயிரிழந்தாரா என்பது குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதே போல், பொம்மிடியை அடுத்த குக்கல்மலையைச் சேர்ந்தவர் பிரசாந்த் (23). லாரி டிரைவர். இவர் நேற்று விடியற்காலை 5 மணிக்கு சேலம்–சென்னை ரெயில் வழித்தடத்தில், பொம்மிடி ரெயில்வே ஸ்டே‌ஷன் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில், பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.