செய்திகள்

மூலக்கொத்தளம் சுடுகாட்டு விவகாரம்: வைகோவுக்கு எதிராக திடீர் போராட்டம்

வைகோவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை மூலக் கொத்தளம் சுடுகாட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கான கல்லறைகள் உள்ளது. இந்த கல்லறைகளை அகற்றிவிட்டு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப் போவதாக வதந்தி பரவியது.

சட்டசபையிலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக பதிலளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் வீடுகளுக்கும் மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. எனவே அந்த கல்லறைகள் அகற்றப்படாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மூலக்கொத்தளம் சுடுகாட்டை பார்வையிட்டார். அப்போது பேட்டி அளித்த அவர், ‘மூலக் கொத்தளம் சுடுகாட்டில் சிறிய இடத்தை கூட எடுக்க விடமாட்டோம்’ என்றார்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராமதாஸ் நகர், பால்டிப்போ, பிரிவில் தோட்டம், போஜராஜன் நகர் பள்ளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வைகோவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1000 பேர் 15 வேன்களில் இன்று காலையில் ம.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இதில் 450 பேர் பெண்கள். அவர்கள் எழும்பூர், எல்.ஜி.ரோடு பகுதியில் வைகோவுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ம.தி.மு.க. அலுவலகத்தில் இன்று காலையில் மாணவர் அணி கூட்டம் நடைபெற்றது. அதில் வைகோ பங்கேற்றிருந்தார். இந்த நேரத்தில் போராட்டம் நடைபெற்றதால் ம.தி.மு.க. வினர் ஆவேச மடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக கீழ்தளத்தில் ம.தி.மு.க. தொண்டர்கள் பலர் குவிந்தனர்.

இந்த நேரத்தில் ம.தி.மு.க. அலுவலகம் முன்பு ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. போராட்டக்காரர்கள் தான் ஆட்டோவில் வருவதாக நினைத்து ம.திமு.க.வினர் ஆட்டோவை அடித்து நொறுக்கினர். இதனால் ம.தி.மு.க. அலுவலகம் முன்பு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. ஆட்டோவை உடைத்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ம.தி.மு.கவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

இந்தநிலையில் ஆட்டோவில் வந்தவர்கள் ம.தி.மு.கவினர் என்பது தெரியவந்தது. போராட்டக்காரர்கள் என்று நினைத்து அவர்களை ம.தி.மு.கவினரே தாக்கிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜீவன் போராட்டக்காரர்கள் மீது எழும்பூர் போலீசில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக வைகோ இன்று மீண்டும் கூறுகையில், ‘மூலக்கொத்தளம் சுடுகாடு தொடர்பான எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ என்றார். #tamilnews