நியூயார்க்:
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி தொழிற்சாலைகளில் இருக்கும் வேலை வாய்ப்பு வெளிநாட்டவருக்கே செல்வதாகவும், அது கட்டுப்படுத்தப்படும் என அறிவித்தார்.
அமெரிக்காவின் ஐ.டி. துறையில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியர்களே பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறதே என்ற எண்ணத்தில் ஐ.டி. துறைகளுக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஐ.டி. நிறுவனங்கள் நஷ்டப்படும் அளவுக்கு கடுமையான முறையில் இரு மடங்கு சம்பள உயர்வு அறிவித்தார். அடுத்த கட்டமாக வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய செல்வதற்கான ‘எச்.1பி’ விசா வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்தார். பல்வேறு கெடுபிடிகளையும் நிபந்தனைகளையும் விதித்தார். இதனால், இந்தியாவில் உள்ள பொறியாளர்கள் வெகுவாக பாதித்துள்ளனர்.
இந்நிலையில், அரசுமுறைப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி முதன் முறையாக வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச உள்ளார். மோடியின் அமெரிக்க வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ள அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் எச் 1 பி விசா பிரச்சனையை மோடி, ட்ரம்ப்பிடம் எடுத்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஐ.டி. துறையானது இந்திய பணியாளர்கள் இல்லாமல் முழுமையும், வளர்ச்சியும் அடையாது இதனால், இந்த பிரச்சனையை முக்கியமாக மோடி எழுப்ப வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறினர்.
மேலும், அமெரிக்காவில் இந்தியர்கள் இனரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாவது குறித்தும் மோடி தனது கவலையை டிரம்பிடம் பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.