செய்திகள்

மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் அனாதையான சிறுவனை இஸ்ரேல் நாட்டில் சந்தித்தார், மோடி

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு வந்த பிரதமர் மோடி மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் பெற்றோரை இழந்து அனாதையான சிறுவனை சந்தித்த நிகழ்ச்சி இங்குள்ள இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு இன்று வந்த பிரதமர் மோடி மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் பெற்றோரை இழந்து அனாதையான சிறுவனை சந்தித்த நிகழ்ச்சி இங்குள்ள இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் தொடர்ந்து மூன்று நாட்கள் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் உள்ள நாரிமான் ஹவுஸ் என்ற ஐந்து மாடி கட்டித்தின்மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து தொண்டூழியம் செய்யும் நிறுவனத்தின் இணை இயக்குனர் ரப்பி கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஆகியோரும் உயிரிழந்தனர்.

கைக்குழந்தை மோஷேவுடன் சான்ட்ரா சாமுவேல்ஸ்

தன்னுயிரை பணயம் வைத்து சிறுவன் மோஷேவின் உயிரை காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ரா சாமுவேலின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு அவரை சிறப்பித்த இஸ்ரேல் அரசு அந்நாட்டின் கவுரவ குடியுரிமையையும் அளித்துள்ளது. தற்போது ஜெருசலேம் நகரில் வேலை செய்துவரும் அவர் வார இறுதி நாட்களில் மோஷேவின் வீட்டுக்கு சென்று அவனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சி அடைகிறார். மோஷேவும் தனது உயிரை காப்பாற்றிய அந்த தாதியின் வருகைக்காக வார இறுதி நாட்களில் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான்.

இந்நிலையில், மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த பயணத்தின்போது, மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த சிறுவன் மோஷேவையும் அவனது உயிரை காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ராவையும்சந்திக்க அவர் விருப்பம் தெரிவிதிருந்தார்.

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் மோஷேவின் தாத்தா, பாட்டி மற்றும் சான்ட்ரா சாமுவேல் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக இஸ்ரேல் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள மோஷேவின் தாத்தா ரப்பி ஷிமோன் ரோஸென்பெர்க், ‘இஸ்ரேலுக்கு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உங்களை சந்திக்க விரும்புகிறார் என இங்குள்ள இந்திய தூதரகத்தில் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தபோது என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் மறக்கப்படவில்லை எங்கள் வலிகளை இந்தியர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்பதை மட்டும் நான் உணர்ந்தேன்.

இந்திய பிரதமரின் இந்த அருங்குணத்தால் நான் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன். அவரை சந்திக்கும் நாளுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார். அவரது பேட்டி அந்நாட்டு ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் தொடர்பான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.