புஜ்:
டோக்லாமில் படைகுவிப்பின்போது சீனத் தூதரை கட்டிப்பிடித்தது ஏன்? என்று ராகுல்காந்திக்கு, பிரதமர் மோடி ஆவேசமாக கேள்வி விடுத்தார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை குஜராத்தில் தொடங்கினார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நலிவா விமான நிலையம் சென்றடைந்தார்.
பின்னர் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கட்ச் மாவட்டம் லக்பாத் தாலுகா மாதானவ் மத் என்னும் இடத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மா ஆஷாபுரா அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அந்த கோவிலில் சுமார் 20 நிமிட நேரத்தை பிரதமர் மோடி செலவிட்டார்.
அப்போது கோவிலுக்கு வந்திருந்த பெண்கள், குழந்தைகள் அவரை சூழ்ந்து கொண்டு தங்களை ஆசிர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, குழந்தைகளின் தலையில் கைகளை வைத்து வாழ்த்து தெரிவித்த அவர் அனைவரையும் வரிசையில் நின்று ஒவ்வொருவராக தன்னை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.
பின்னர், அங்கிருந்து புஜ் நகருக்கு சென்று தனது முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கும், டுவிட்டரில் தன்னைப் பற்றி கிண்டலடித்ததற்கும் தக்க பதிலடி கொடுத்தார்.
ஹபீஸ் சயீத்தை (2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்) பாகிஸ்தான் விடுதலை செய்துவிட்டது. எனவே நீங்கள் ஜனாதிபதி டிரம்பை இன்னும் நிறைய தழுவிடவேண்டும் என்று அண்மையில் டுவிட்டர் மூலம் ராகுல்காந்தி கிண்டல் செய்திருந்தார்.
இதற்கு ஆவேசமாக பதில் அளித்த மோடி, டோக்லாம் எல்லையில் இந்தியா- சீனா இடையே பதற்றம் நிலவியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் கேலி செய்தார்.
அவர் பேசும்போது, “டோக்லாம் பிரச்சினையின்போது, நமது ராணுவ வீரர்கள் 70 நாட்களுக்கும் மேலாக சீன படைகளுக்கு எதிராக இரவு பகலாக வைத்த கண் வாங்காமல் விழித்து இருந்தனர். அந்த நேரத்தில் இங்குள்ள சீன தூதரை நீங்கள் சந்தித்து கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினீர்களே, அது ஏன்?... யாருடைய நலனுக்காக இதைச் செய்தீர்கள்? உங்களைத்தான் (ராகுல் காந்தி) கேட்கிறேன்” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
அதேபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர் ராகுல்காந்தியின் பெயரை கூறாமல் ஏளனம் செய்தார்.
“சமீபத்தில் பாகிஸ்தான் கோர்ட்டு ஒரு பயங்கரவாதியை விடுதலை செய்தது. அதற்காக இங்கே இருக்கும் காங்கிரசார் கைதட்டுவது ஏன் என்பது புரியவில்லை. நீங்கள் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலை (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) மதிக்கவில்லை. பிறகு ஏன் அதைப்பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் மவுனமாக இருப்பதே சிறந்தது” என்றார்.
“உரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நமது படை வீரர்களை கொன்றனர். அதற்கு பதிலடியாக நமது வீரர்கள் அவர்களது எல்லைக்குள் ஊடுருவி துல்லியத் தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாக திரும்பினர். மறுநாள் செய்தித் தாள்களில் அவர்கள் (பாகிஸ்தானியர்கள்) உடல்களை டிரக் வண்டிகளில் எடுத்துச் சென்றதாக செய்திகள் வெளியானது. இந்த துல்லிய தாக்குதலுக்காக நமது ராணுவத்தை நீங்கள் பாராட்டவில்லை. மாறாக நமது வீரர்கள் யாரும் மரணம் அடையவில்லையா, காயம் அடையவில்லையா? என்று மட்டுமே கேள்வி எழுப்பினீர்கள். அதற்கான வீடியோ, புகைப்பட ஆதாரம் எதுவும் உங்களிடம் இருக்கிறதா?....” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கும் மோடி ஆவேசமாக பதில் அளித்தார். “குஜராத் மண்ணின் மைந்தனான என் மீது பொதுவாழ்வில் எந்த கறையும் கிடையாது. இந்த மண்ணின் மைந்தன் மீது நீங்கள் அடிப்படை ஆதாரற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள். இதை குஜராத் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை மோடி ஆதரித்து பேசினார்.