செய்திகள்

மதவாதம், வறுமை இல்லாத புதிய இந்தியாவை உருவாக்குவதே மோடியின் கனவு - ராஜ்நாத்சிங்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத்சிங், மதவாதம் மற்றும் வறுமை இல்லா புதிய இந்தியாவை உருவாக்குவதே மோடியின் கனவு என்றார்.

லக்னோ:

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் பயணமாக தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியான லக்னோவிற்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல்நாளான நேற்று, அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “வறுமை, கல்வியறிவின்மை, சாதிவாதம், மதவாதம், தீவிரவாதம் ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் கனவு காண்கிறோம். பிரதமரும் அத்தகைய புதிய இந்தியாவை உருவாக்கவே கனவு கண்டார்”, என கூறினார்.

பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு அங்குள்ள முக்கிய பா.ஜ.க. பிரமூகர்களை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து தனது பயணத்தை முடித்துகொண்டு டெல்லி திரும்புகிறார்.