செய்திகள்

மோடி அரசு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: ஜிக்னேஷ் மேவானி

டெல்லியில் நடைபெற்ற சமூக நீதி பேரணியில் பங்கேற்ற குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, மத்தியில் ஆட்சிசெய்யும் பிரதமர் மோடி அரசு ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற சமூக நீதி பேரணியில் பங்கேற்ற குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, மத்தியில் ஆட்சிசெய்யும் பிரதமர் மோடி அரசு ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.

தலித் செயற்பாட்டாளரும் குஜராத் மாநிலம் வத்கம் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவருமான ஜிக்னேஷ் மேவானி, டெல்லியில் உள்ள பாராளுமன்ற தெருவில் சமூக நீதி பேரணி என்ற நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.

டெல்லி மட்டுமன்றி லக்னோ, அலகாபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர். இதில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார், அஸ்ஸாமைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் அகில் கோகோய், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஜிக்னேஷ் மேவானி பேசுகையில், நான், வெறுப்பு அரசியலுக்கு எதிரானவன். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்பி வருகிறது. இந்திய அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக மோடி அரசு உள்ளது. தலித் சமூகத்தினர் பாதிக்கப்படும் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசுவதில்லை என குற்றம் சாட்டினார்.

பேரணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.