செய்திகள்

கால்நடைகளை விற்க பிறப்பிக்கப்பட்ட தடை பட்டியலில் இருந்து எருமை மாடுகளுக்கு விலக்கு? மத்திய அரசு பரிசீலனை

இறைச்சிக்காக கால்நடைகளை விற்க பிறப்பிக்கப்பட்ட தடை பட்டியலில் இருந்த எருமை மாடுகளுக்கு விலக்கு வரலாம். இதுபற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

இறைச்சிக்காக கால்நடைகளை விற்க பிறப்பிக்கப்பட்ட தடை பட்டியலில் இருந்த எருமை மாடுகளுக்கு விலக்கு வரலாம். இதுபற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறது.

மத்திய அரசு கடந்த மே மாதம் அதிரடியாக கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து உத்தரவிட்டது.

அந்த தடை உத்தரவில் இறைச்சிக்காக சந்தைகளில் விற்க கூடாது என தடை விதிக்கப்பட்ட கால்நடைகள் பட்டியலில் காளைகள், இளங்காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இந்த அறிவிக்கை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இது பசுக்களை இறைச்சிக்காக அடித்துக் கொல்வதற்கு தடை விதிக்கப்படாத கேரளா, மேற்கு வங்காளம், மேகாலயா போன்ற மாநிலங்களில் போராட்டங்களுக்கும் வழி வகுத்தது.

இந்த அறிவிக்கை, கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்ற விமர்சனமும் எழுந்தது. விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் கூறப்பட்டது.

அந்த அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:-

* இளம் கால்நடைகளை விற்பனை சந்தைக்கு கொண்டு வரக்கூடாது.

* கால்நடை சந்தைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளை இறைச்சிக்காக விற்க வில்லை என்று எழுத்து வடிவில் ஒப்புதல் அளித்த பிறகுதான் அவற்றை விற்பனை செய்ய வேண்டும்.

* கால்நடைகளை விற்பனை செய்கிறபோது, அவற்றை விற்பவர் தன்னை விவசாயி என்று நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களிடம் மட்டுமே விற்க முடியும்.’

* காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் ஆகியவை இந்த தடையில் வருகிறது.

* மாநில கால்நடைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதி பெறாமல், கால்நடைகளை விற்பனை செய்கிறவர், அடுத்த மாநிலத்தினருக்கு விற்பனை செய்யக்கூடாது.

இப்படி பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த புதிய விதிகளை அமல்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் தடை விதித்தது.

இந்த நிலையில் கால்நடை விற்பனையில் தடை விதித்து வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அறிவிக்கை திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும், அவற்றில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தை கேட்டிருப்பதாகவும் பல்வேறு ஊடகங்களில் நேற்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் இறைச்சிக்காக கால்நடைகளை விற்க விதிக்கப்பட்டிருந்த தடை பட்டியலில் இருந்து எருமை மாடுகளை விலக்கிக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது குறித்து சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு விவாதித்து, பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் இது குறித்த முடிவை மத்திய அரசு எடுத்து, அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.