செய்திகள்

பிரதமர் மோடி 17-ந்தேதி இங்கிலாந்து செல்கிறார்

காமன்வெல்த் நாடுகள் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற 17-ந்தேதி இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளார். #Modi #CHOGM

மாலை மலர்

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெளிநாட்டு பயணத்தை தொடங்கி விட்டார். வருகிற 17-ந்தேதி அவர் இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அந்த கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார். அப்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

18-ந்தேதி காலை அவர் இங்கிலாந்து பிரதமரை சந்தித்து பேசுகிறார். அப்போது 1 லட்சம் இந்தியர்கள் இங்கிலாந்தில் சட்ட விரோதமாக குடியேறி இருப்பதை பற்றி விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட உள்ளனர்.

அன்று மாலை இங்கிலாந்து அரண்மனைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து பேசுகிறார். ராணி எலிசபெத்துக்கு இந்தியா சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது.

இங்கிலாந்தில் இந்தியர்களையும் சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பிரதமர் மோடியை எதிர்த்து இந்தியர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ததற்காக மோடிக்கு லண்டனில் எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள்.