புதுடெல்லி:
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயை டெல்லியில் பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஹமித் கர்சாய். இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயை டெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், எனது நண்பர் ஹமித் கர்சாயை டெல்லியில் சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். அத்துடன், ஹமித் கர்சாயுடன் இரவு விருந்தில் பங்கேற்றதையும் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயுடனான இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.