செய்திகள்

இந்தியா - ஆசியான் உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது - மோடி

டெல்லியில் நடைபெற்றுவரும் ஆசியான் மாநாட்டில் உரையாற்றிய மோடி, இந்தியா - ஆசியான் இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என கூறியுள்ளார். #ASEANsummit #PMModi

மாலை மலர்

புதுடெல்லி: 

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆசியான் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று 2018 ஆசிய மாநாட்டு தபால் தலையை இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் கூட்டாக வெளியிட்டனர் 

இந்த மாநாடு, ஆசியான் - இந்திய கலந்துரையாடல் உறவின் 25 ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி ஆசியான் தலைவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆசியான் - இந்தியா நினைவு உச்சி மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமக்கிடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த மாநாட்டை நடத்துவது இந்தியாவுக்கு பெருமையான விசயம். குடியரசுதின விழா கொண்டாட்டங்களில் அனைத்து தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள்.

1992-ல் இருந்து நமது கூட்டணி வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவுக்கு வந்ததன் மூலம் 125 கோடி இந்திய மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டீர்கள். ஆசியான் நாடுகளுக்கிடையேயான கடல் போக்குவரத்தில் கூட்டுமுயற்சியை ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். நமது நட்பானது கலாச்சாரம் மற்றும் நாகரிகங்களுடன் இணைந்து வளர்க்கப்படுகிறது. ஆசியான் உச்சிமாநாட்டின் நோக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பழங்கால இந்திய காவியமான ராமாயணம் ஆசியான் மற்றும் இந்திய துணைக் கண்டங்களில் ஒரு மதிப்புமிக்க மரபுகளை பகிர்கிறது. புத்த மதமும் நம்மை நெருக்கமாக பிணைக்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இஸ்லாமியம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய தொடர்பைக் கொண்டுள்ளது.

இவ்வாறு மோடி பேசியுள்ளார். #ASEANsummit #PMModi #tamilnews