செய்திகள்

ஜி-20 மாநாட்டில் சீனாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் - தீவிரவாதத்தை எதிர்க்க உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு

சிக்கிம் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமை தாங்கும் சீனாவுக்கு இன்று புகழாரம் சூட்டிய பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாதத்தை எதிர்க்குமாறு உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை மலர்

பெர்லின்:

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இன்று தொடங்கிய ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய முறையில் தீவிரவாத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நிதி பரிமாற்ற முறை, ஆதரவு அமைப்புகள், பதுங்குமிடங்கள், ஆதரவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஜி-20 அமைப்பில் இருக்கும் நாடுகள் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி. எனப்படும் புதிய சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சர்வதேச பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டெடுக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டவும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது.

பருவ நிலை மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாரிஸ் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த எழுத்துவடிவில் மட்டுமல்ல, உயிர்மூச்சாகவும் இந்தியா தன்னை அர்ப்பண்ணித்து கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இன்றைய கூட்டத்தில் இந்தி மொழியில் பேசிய மோடி, இறுதியாக.., சீனாவின் தலைமையின்கீழ் பிரிக்ஸ் அமைப்பு ஆற்றிவரும் அபார செயல்திறனை புகழந்து பேசினார். வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் உள்ள க்சியாமென் நகரில் நடைபெறவுள்ள ஒன்பதாவது பிரிக்ஸ் மாநாடு வெற்றிகரமாக அமைய தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.