செய்திகள்

மெட்ரோ சுரங்க ரெயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு அதிநவீன வசதிகள்

மெட்ரோ சுரங்க ரெயிலில் பொதுமக்கள், பயணிகள் பீதியின்றி பயணம் செய்ய பல்வேறு சிறப்பு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

மாலை மலர்

சென்னை:

திருமங்கலம்-நேரு பூங்கா இடையே சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில் நாளை முதல் ஓடுகிறது.

இதற்காக 7.5 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியை குடைந்து 60 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

நாளை காலை 10 மணிக்கு திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கொடியசைத்து மெட்ரோ சுரங்க ரெயிலை தொடங்கி வைக்கிறார்கள். அதை தொடர்ந்து பொதுமக்கள் இந்த ரெயிலில் பயணம் செய்யலாம்.

* திருமங்கலம்-நேரு பூங்கா வரை ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆகும்.

* முதல் தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்த பின்னர் தான் சுரங்க ரெயில் நிலையத்திற்குள் செல்ல முடியும்.

* பொதுமக்கள், பயணிகள் மெட்ரோ சுரங்க ரெயிலில் பீதியின்றி பயணம் செய்ய பல்வேறு சிறப்பு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

* ரெயில் பாதையில் 250 மீட்டர் இடைவெளியில் அவசர வழிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

* தேவையான இடங்களில் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

* அவசர காலத்தில் மக்கள் நடந்து செல்ல ரெயில் பாதை அருகே நடைபாதையும் அமைக்கப்பட்டு உள்ளது.

* ரெயில் நிலையங்களின் உள்பகுதியில் காற்றோட்டத்துக்காக 8 ராட்சத மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்போதும் காற்று வீசிக்கொண்டு இருக்கும். மூச்சு திணறல் எதுவும் ஏற்படாது.

* எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் புகையை வெளியேற்ற சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்கு வசதிகள் தேவையான அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளன.

* மின் தடை ஏற்பட்டால் யூ.பி.எஸ்.ஜெனரேட்டர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் எவ்வித பயமின்றி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திருமங்கலம்-நேரு பூங்கா சுரங்க மெட்ரோ ரெயில் நாளை பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்படுகிறது. பயணிகள், பொது மக்கள் எந்தவித பயமின்றி பயணம் செய்யலாம். இது விரைவான பயணமாகவும், மகிழ்ச்சி தரக்கூடிய பயணமாகவும் இருக்கும்.

மெட்ரோ ரெயிலில் மது அருந்தி பயணம் செய்பவர்கள், பயணிகளுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பட்டாசு, வெடிபொருட்கள் எடுத்து செல்பவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

டிக்கெட் எடுக்காமல் ரெயில் நிலையங்களுக்குள் நுழைபவர்களுக்கு 3 மாதம் ஜெயில், ரூ.250 அபராதம் விதிக்கப்படும். மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் நடந்தால் 6 மாதம் ஜெயில், ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் ரூ.50-ம், பயண கட்டண தொகையும் வசூல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மெட்ரோ சுரங்க வழித்தடமான திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர் பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்களில் குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், காற்றோட்ட வசதிகள், தானியங்கி சிக்னல், தீ, புகை அணைக்க சிறப்பு வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.