செய்திகள்

தன்வினை தன்னை சுடும்: மராட்டியத்தில் பசு பாதுகாவலர்கள் மீது தாக்குதல்

மராட்டிய மாநிலத்தில், சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றி வந்ததாக கூறி போலீசில் பிடித்து கொடுத்த பசு பாதுகாவலர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்றது.

மாலை மலர்

மும்பை:

இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்வதாகவும், மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் கூறி, பசு காவலர்கள் என்ற போர்வையில் கும்பலாக தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக மராட்டிய மாநிலத்தில் பசு பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நேற்றுநடைபெற்றது. 

மராட்டிய மாநிலத்தின் தாவுந் - அகமத்நகர் சாலையில் பசுக்களை ஏற்றிச்சென்ற ஒரு வாகனத்தை சிவசங்கர் ராஜேந்திர சுவாமி என்பவர் தலைமையிலான 9 பசு காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் இரண்டு பசு மற்றும் பத்து காளைகள் இருந்துள்ளன. 

எனவே சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிவந்ததாக கூறி வாகன உரிமையாளர் வாஹிப் ஷெய்க் மற்றும் ஓட்டுநர் ராஜூ ஷெய்க் ஆகியோரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வாகன உரிமையாளர் தனது கூட்டாளிகளுக்கு தகவல் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, ஆயுதங்களுடன் காவல்நிலையம் வந்த வாஹிப்பின் கூட்டாளிகள், காவல்நிலையத்திற்கு அருகில் வைத்து பசுபாதுகாவலர்களை கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதல் தொடர்பாக பசு பாதுகாவலர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் புகார் அளித்துள்ளதாகவும், புகார் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுதர்சன் முண்டே கூறினார்.

புனே மற்றும் அகமத்நகர் மாவட்டங்களில் பசு பாதுகாப்பு தொடர்பாக ராஜேந்திர சுவாமி தரப்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.