புதுச்சேரி:
புதுவையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதலில் சின்ன வீராம் பட்டினத்தில் உள்ள வின்ட் பிளவர் என்ற சொகுசு ரிசார்ட் ஓட்டலில் தங்கினார்கள். அங்கு தொடர்ந்து அறைகள் கிடைக்காததால் புதுவையில் உள்ள சன்வே ஓட்டலுக்கு நேற்று மாறினார்கள்.
இந்த ஓட்டல், நகரின் மத்தியில் அமைந்து இருப்பதாலும், குறுகிய பரப்பிலேயே ஓட்டல் இருப்பதாலும் எம்.எல். ஏ.க்களின் தனிமை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேறு ஓட்டல் ஏதாவது கிடைக்குமா? என்று தேடி வருகிறார்கள்.
புதுவையில் எப்போதுமே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ஓட்டல் அறைகளும் புக் ஆகி விடும்.
இந்த வாரத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததால் 3 நாட்களும் புக் செய்து விட்டார்கள். நாளை மாலை அவர்கள் காலி செய்து சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.
எனவே, நாளை மாலை அல்லது திங்கட்கிழமை வேறு ஓட்டலை ஏற்பாடு செய்து அங்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அவர்கள் ஏற்கனவே தங்கி இருந்த வின்ட் பிளவர் விடுதி பல ஏக்கர் நிலப்பரப்போடு கடற்கரையில் இயற்கை எழிலோடு அமைந்தது.
இந்த விடுதி நகரத்தில் இருந்து விலகி அடர்ந்த மரங்களுக்குள் யார் பார்வையும் படாதவாறு அமைந்திருந்தது.
மேலும் விடுதியை சுற்றிலும் ஆளுயுரத்திற்கும் உயரமான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. விடுதிக்கு வெளியில் விடுதி காப்பாளர்கள், புதுவை போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இங்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த உற்சாகத்தோடு வலம் வந்தனர். விடுதி நிர்வாகமும், போலீசும் அனுமதித்தால் மட்டுமே விடுதிக்குள் யாரும் செல்ல முடியும்.
இப்போது தங்கி உள்ள சன்வே ஓட்டலிலும் அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால், பிரதான சாலையில் அமைந்துள்ளது.
ஓட்டலை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளது. குடியிருப்புகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் இருந்து ஓட்டலில் நடப்பதை வேடிக்கை பார்க்க முடியும். இதனால் எம்.எல்.ஏ.க்கள் அறையில் இருந்து வெளியே வராமல் முடங்கிக்கிடக்கின்றனர்.
கடற்கரை ரிசார்ட்டில் கிடைத்த சுதந்திரம், உற்சாகம் இந்த ஓட்டலில் இல்லை என எம்.எல்.ஏ.க்கள் நினைக்கின்றனர். தொடர்ச்சியாக இங்கு தங்க வேண்டாம், ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் மீண்டும் சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு இடம்பெயரலாம் என எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டனர்.
இதற்காக சின்ன வீராம்பட்டினம் விடுதி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர்.
கூவத்தூரில் இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த போது ஒட்டு மொத்த விடுதியையும் தங்கள் வசப்படுத்தி இருந்தனர். அதேபோல் இந்த விடுதியையும் ஒட்டு மொத்தமாக வசப்படுத்துவதற்காக அனைத்து அறைகளையும் கேட்டு வருகிறார்கள்.
ஒருவேளை வின்ட் பிளவர் ஓட்டலில் இடம் கிடைக்காவிட்டால் அதன் அருகே உள்ள மற்றொரு ரிசார்ட் ஓட்டலான லே-பாண்டியில் அறைகள் கிடைக்குமா? என்று தேடி வருகிறார்கள்.