செய்திகள்

புதுவை நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க திடீர் உத்தரவு

நியமன எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன் திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை சட்டமன்றத்துக்கு மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்ய முடியும்.

புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவித்தது.

இது தொடர்பான உத்தரவு ஜூலை மாதம் 4-ந் தேதி புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க புதுவை சட்டமன்ற சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார். அதிகாரம் படைத்த உரிய நபரிடம் இருந்து தனக்கு எந்த உத்தரவும் வராததால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்க முடியாது என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார். அதோடு கடந்த மாதம் நடந்த சட்டமன்ற குளிர்கால கூட்டத்திலும் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதே நேரத்தில் தங்களை சட்டமன்றத்தில் அனுமதித்து எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வருகிறது. இந்த வழக்கில் வாதம், பிரதிவாதம் முடிந்துள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டசபை செயலாளருக்கு புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து அறிவித்தது.

இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியானது. கடந்த 21.11.2017 அன்று உள்துறையில் இருந்து இது தொடர்பாக உத்தரவு வந்துள்ளது. மேலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் தடை ஏதும் இல்லை.

நியமன எம்.எல்.ஏ.க் களை ஏற்பதா? இல்லையா? என்பதை சபாநாயகர் முடிவு செய்ய முடியாது. எனவே, நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நியமன எம்.எல். ஏ.க்களுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கவும் உள்ளாட்சித் துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.