சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்க அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தப் போகிறார் என்றதும் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படாததால் சில எம்.எல்.ஏ.க்களையே காண முடிந்தது.
இந்த நிலையில் 10.30 மணி அளவில் ராயப்பேட்டை தலைமை கழகத்துக்கு டி.டி.வி.தினகரனின் முக்கிய ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. தனி ஆளாக வந்தார். அவர் தலைமை கழக நிர்வாகி இல்லை என்பதால், ஆலோசனை கூட்டம் நடந்த மேல் தளத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கீழ் தளத்திலேயே அவர் அமர வைக்கப்பட்டார். இதனால் அவர் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தார். பிறகு காரில் ஏறி புறப்பட்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
சசிகலாவும், டி.டி.வி. தினகரனும்தான் இந்த இயக்கத்தை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கும் அதிகாரம் இங்குள்ள யாருக்குமே இல்லை. அவர்களை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது.
பிரமாண பத்திரத்தில் திருத்தம் செய்வதற்காக தலைமை கழக நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். பிரமாண பத்திரத்தில் மாற்றம் செய்தாலும் சசிகலா, டி.டி.வி.தினகரனை ஒன்றும் செய்து விட முடியாது.
டி.டி.வி.தினகரன் ஆட்கள் வந்தால் தலைமை கழகத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று சிலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் இன்று இங்கு வந்தேன்.
தலைமை கழகத்துக்கு வந்த என்னை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. நான் தனியாக துணிச்சலுடன் வந்தேன். என்னை தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.