சென்னை:
ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்படுகிறார். காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் உள்ள 50 எம்.பி.க்கள், 134 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளை பெற பா.ஜனதா முயற்சித்து வருகிறது. இதற்கான ஆதரவையும் கேட்டுள்ளது.
ஆனால் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் உள்ளது. இது தவிர டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.பி., எம்.எல்..ஏ.க்களும் உள்ளனர்.
இவர்கள் அனைவரது ஓட்டுகளை பெறுவதற்கு பா.ஜனதா மேலிடம் ஏற்பாடு செய்து வருகிறது.
இதில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 122 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஓட்டு போட உத்தரவிடுவது யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் உத்தரவிடுவாரா? அல்லது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து அதை கொறடாவுக்கு சொல்வாரா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று உத்தரவிடுவதற்கும் அதுபற்றி விவாதிப்பதற்கும் கட்சியின் பொதுச்செயலாளர்தான் முடிவு செய்ய முடியும். அல்லது அவருக்கு அடுத்ததாக உள்ள கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்தான் முடிவெடுத்து அறிவிக்க முடியும்.
இவர்களிடம் இருந்துதான் கட்சி கொறடா உத்தரவுகளை பெற முடியும். இதுதான் நடைமுறை.
இவ்வாறு அவர் கூறினார்.