செய்திகள்

எம்.எல்.ஏ வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய ஸ்டாலின் மனு தள்ளுபடி

எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாலை மலர்

சென்னை:

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வீடியோ ஆதாரம் ஒன்றினை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு என்பதால் சிபிஐ இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று தெரிவித்தார். இருப்பினும் முதல்வரின் மனுவுக்கு எதிராக விளக்க மனு தாக்கல் செய்த ஸ்டாலின் சிபிஐ, வருவாய் புலனாய்வு விசாரணைக்கு உரிய முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். 

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ விசாரணை கோரிய ஸ்டாலின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகளை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.