செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஓ.பி.எஸ். அணிக்கு முன்கூட்டியே தெரியும்: எம்.எல்.ஏ. சரவணனின் புதிய வீடியோ பேச்சு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் என்பது ஓ.பி.எஸ். அணிக்கு முன் கூட்டியே தெரியும் என்று எம்.எல்.ஏ. சரவணன் கூறுவது போன்ற புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதும், புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்ததால் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதில் சசிகலா அணியினர் உறுதியுடன் இருந்தனர்.

அப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் அங்கிருந்து தப்பி வந்து ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்.

இந்த நிலையில் சரவணன் எம்.எல்.ஏ. பேசியது போன்ற வீடியோ ஒன்று ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலா அணிக்கு ஆதரவு அளிக்க ரூ.6 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 கோடி வரையில் தருவதாக கூறப்பட்டதாகவும் எம்.எல்.ஏ. சரவணன் தெரிவிப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. வழக்கு போட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ பதிவை எம்.எல்.ஏ. சரவணன் மறுத்துள்ளார்.

வீடியோவில் இருப்பது நான்தான். என்னைப் போல யாரோ மிமிக்ரி செய்து பேசியுள்ளனர் என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி கிரிமினல் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் சரவணன் எம்.எல்.ஏ. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பேசி இருக்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் என்பது ஓ.பி.எஸ். அணிக்கு முன் கூட்டியே தெரியும் என்று சரவணன் எம்.எல்.ஏ. கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியுடன் ஓ.பி.எஸ். அணியினர் மிகவும் நெருக்கமாக இருந்தனர். எங்கள் அணிக்கு பா.ஜனதாவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகும் என்பது தெரிந்திருந்தது.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு மக்கள் ஓட்டு போட தயாராக இருந்தனர்.

இதன் காரணமாக சசிகலா அணி சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் போலீசாரின் துணையுடன் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்தார் என்றும் சரவணன் எம்.எல்.ஏ. பேசியது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ். முன்கூட்டியே சொல்லி விட்டார் என்று சரவணன் கூறுவது போன்ற காட்சியும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த புதிய வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.