கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது சபாநாயகராக இருந்தவர் கார்த்திகேயன். இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது தொகுதியான அருவிக்கரை தொகுதியில் அவரது மகன் சபரிநாதன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் இளம் எம்.எல்.ஏ.வான சபரிநாதன் தந்தையை போலவே தொகுதி மக்களிடம் அன்பாக பழகி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது நம்பிக்கையை பெற்றவராக இருக்கிறார்.
இவர் தற்போது தனது திருமணம் பற்றி அறிவித்து உள்ளார். அவரது தொகுதிக்குட்பட்ட ஆரிய நாடு பகுதியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் சபரிநாதன் இதுபற்றிய தகவலை தொண்டர்களின் கரகோஷத்திற்கு இடையே வெளியிட்டார்.
அப்போது சபரிநாதன் எம்.எல்.ஏ. பேசும்போது ‘நான் செல்லும் இடங்களில் எல்லாம் எனது தொகுதி மக்கள் குறிப்பாக தாய்மார்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த தாய்மார்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் எனது திருமண தகவலை உங்கள் முன்பு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மணக்கப்போகும் பெண் திருவனந்தபுரம் மாவட்ட சப்-கலெக்டர் திவ்யா அய்யர். இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் ஜூன் மாதம் நடைபெறும். திருமண தேதியை பெரியோர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
மேலும் தானும் திவ்யா அய்யரும் ஜோடியாக இருக்கும் போட்டோவையும் சபரிநாதன் எம்.எல்.ஏ. தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ‘நாங்கள் 2 பேரும் இரு குடும்பத்தினர் ஆசியுடன் திருமணம் செய்ய உள்ளோம். உங்கள் வாழ்த்துக்களும் எங்களுக்கு தேவை’ என்று சபரிநாதன் எம்.எல்.ஏ. பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து பேஸ்புக்கில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட சபரிநாதன் எம்.எல்.ஏ.- சப்-கலெக்டர் திவ்யா அய்யர் படம்.