செய்திகள்

தினகரன் கொடுத்த பதவி எனக்கு தேவையில்லை: எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ்

அ.தி.மு.க. அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கொடுத்த பதவி எனக்கு தேவையில்லை என்று திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் கூறி உள்ளார்.

மாலை மலர்

மதுரை:

அ.தி.மு.க. அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சிலருக்கு கட்சி பொறுப்புகளை அறிவித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் விவசாய பிரிவு இணைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த பதவி தனக்கு தேவையில்லை என்று ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

இதுதொடர்பாக இன்று அவர் மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரனிடம் நான் பதவி எதுவும் கேட்கவில்லை. எனக்கு பதவி கொடுத்ததை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அந்த பதவியை நான் ஏற்கவில்லை. எனக்கு உடல் நிலை சரியாக இல்லை. எனவே டி.டி.வி.தினகரன் தந்த பொறுப்பை ஏற்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார். எனவே அவர்தான் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த வேண்டும். டி.டி.வி.தினகரன் தலைமைக்கழகம் வருவது குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது.

புதிய நிர்வாகிகள் நியமனத்தில் தினகரன் அவசரப்பட்டு விட்டார். அவரது அறிவிப்பை மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.