சென்னை:
முரசொலி பவள விழா நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணை நேற்று சந்தித்த மு.க.ஸ்டாலின் ஆகஸ்டில் நடக்கும் பவள விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். தி.நகரில் உள்ள நல்லக்கண்ணு இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில், முரசொலி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்க கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அதிமுக தோழமை கட்சி எம்.எல்.ஏ.களுக்கு மு.க.ஸ்டாலின் இன்று அழைப்பிதழ் வழங்கினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக ஸ்டாலினை சந்தித்துள்ளனர். ஆளுங்கட்சியின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.