செய்திகள்

தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம் வம்புக்கு இழுக்கிறார்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

ஓ. பன்னீர்செல்வம் பொதுக் கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு சட்ட மன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க முன்வர வேண்டும் என்று முகஸ்டாலின் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எடப்பாடி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது”, என்று ராமநாத புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். ஆக்கபூர்வமான கொள்கைகள் ஏதும் இல்லாமல் அரசியலில் கொடிபிடிக்க ஆசைப்படும் அவர் அசிங்கமான குற்றச்சாட்டை கூறுவது எந்த அதிகாரமும் இல்லாமல் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனி சாமியின் குதிரை பேர அரசின் முகத்திரையை தினமும் கிழித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி அலைகிறார்.

சட்டமன்றத்திற்குள் நடக்கும் தி.மு.க.,வின் ஆக்க பூர்வமான விவாதங்களை, குதிரை பேர அரசின் மீது கிளப்பும் ஊழல் புகார்களை மூடி மறைக்க முயன்று வருவோரின் பட்டியலில் ‘இலவச இணைப்பாக’ ஓ. பன்னீர்செல்வமும் சேர்ந்திருப்பதில் ஆச்சர்யமில்லை.

ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.,வின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து ‘டெல்லியில்’ உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள ஓ. பன்னீர்செல்வம் முயற்சிப்பது மட்டும் நன்கு தெரிகிறது.

கூவத்தூரில் மிகப்பெரிய ‘கொண்டாட்டம்’ நடத்தி, கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தபோது ‘ரகசிய கூட்டணி’ அமைத்து எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக பாடுபட்டவர் ஓ.பன்னீர்செல்வம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்று அவரது சமாதியில் ஒரு ‘மவுன விரத’ நாடகத்தை நடத்தி விட்டு, பிறகு திரு. எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கொள்ள ‘இரகசிய பேச்சுவார்த்தை’ நடத்தியது ஓ. பன்னீர்செல்வம்.

அந்த பேச்சுவார்த்தை அம்பலத்திற்கு வந்ததும் ஒரு கமிட்டியை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியதும் இதே பன்னீர்செல்வம்தான். இப்போது முதல்-அமைச்சர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன், “கமிட்டி கலைப்பு”, “இணைப்பு கிடையாது” என்றெல்லாம் வெளியில் கதை அளந்துவிட்டு, திரைமறைவில் இன்னமும் இணைப்பதற்கு ஓட்டல் ஓட்டலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருபவர் ஓ. பன்னீர் செல்வம்தான்.

ஒன்றுகூடி தமிழகத்தை கொள்ளையடித்த இரு அணிகளின் சார்பிலும் ‘எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்’ பா.ஜ.க நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைதூக்கி நின்ற போது எந்த மாதிரி ரகசிய கூட்டணியை எடப்பாடி பழனிசாமியுடன் அவர் வைத்துக் கொண்டார்? அ.தி.மு.க.விற்குள் உள்ள இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ‘ரகசிய கூட்டணியின்’ வெளிப்பாடுதான் அப்படி இருவரும் டெல்லியில் நின்று காட்சியளித்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா? ‘பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு’ என்று ஓ.பன்னீர் செல்வம் ஊழலில் திளைத்து விட்டு உத்தமம் வேடம் போடலாமா?

ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தர விட்டது பற்றி நான் பிரச்சினை எழுப்பியபோது ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தான் இருந்தார்.

அப்போது ஏன் வழக்குபோட வேண்டும் என்று அவர் கேட்க வில்லை? சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கேள்விகேட்க துணிச்சல் இல்லாத ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போய் நின்று கொண்டு “ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய கூட்டணி” என்று பேசுவது தி.மு.க.,விற்கு கிடைத்துவரும் மக்கள் ஆதரவை பொறுத் துக்கொள்ள முடியாமல் தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதலில் கூறும் உப்புச்சப்பு இல்லாத குற்றச்சாட்டு.

ஊழலில் ஒன்றாக திளைத்தவர்கள், துறைவாரியாக பட்டியல் போட்டு வசூலித்தவர்கள், சதவீத கணக்கில் காண்டிராக்டில் ஊழல் பணத்தை சேர்த்தவர்கள், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சசிகலா குடும்பத்திற்கு ‘கும்பிடு’ போட்டு கோடி கோடியாக சம்பாதித்து கொடுத்தவர்கள் இன்றைக்கு ‘புனித வேடம்’ போட்டுக் கொள்ளட்டும். அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை.

ஆனால், அந்த ஊழலில் மூழ்கிக் கிடக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தி.மு.க.,வை வம்புக்கு இழுக்க எந்த தகுதியும் இல்லை என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விட்டால் இன்னும் நான்கு வருடம் கொள்ளையடிக்கலாமே என்ற ஆசையில் ‘இணைந்து கொள்ள’ ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தும் ஓ. பன்னீர்செல்வம் பொதுக் கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்ட மன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.