சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கச்சராயன் குட்டை ஏரியை தி.மு.க.வினர் தூர்வாரப்பட்டது.
அதனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந் தேதி பார்வையிடுவதற்காக கோவையில் வழியாக கார் மூலம் சேலம் வருவதற்காக புறப்பட்டார்.
அப்போது அவரை கோவை - சேலம் எல்லையில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கச்சராயன் குட்டை ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட அனுமதி வழங்கியது. மேலும் அவருடன் 25 பேர் செல்ல அனுமதியும் வழங்கியது.
முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சேலம் வந்தார். அவரை தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் மாலை 4 மணிக்கு கச்சராயன்குட்டை ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
அவருடன் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ராஜா அவைத் தலைவர் கோபால் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்கின்றனர்.
ஏரிகளில் வண்டல் மண்ணை அள்ளி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து தி.மு.க.வினர் ஏற்கனவே தூர்வாரிய கச்சராயன் குட்டை ஏரியில் மீண்டும் அந்த பகுதி அ.தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள் அங்கு வண்டல் மண்களை அள்ளிச் சென்றனர். இதனால் தி.மு.க.- அ.திமு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது.
போலீசார் பாதுகாப்புடன் அ.தி.மு.க.வினர் வண்டல் மண் எடுத்து சென்றனர். இதையடுத்து தி.மு.கவினர் கோர்ட்டு அனுமதி பெற்று இன்று மு.க.ஸ்டாலின் அந்த ஏரியை பார்வையிடுகிறார். இதனால் அங்கு அ.தி.மு.க.வினரால் விவசாயிகளால் தூர்வாரப்பட்ட ஏரி என்று பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலின் வருவதை யொட்டி அங்கு எந்தவித அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எடப்பாடி டி.எஸ்.பி. தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.