சென்னை:
சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஒரு நாடு 33 சதவிகித வனப்பரப்பு கொண்டிருக்க வேண்டிய நிலையில் தமிழகத்தில் 17.5 சதவிகிதமே, வனப்பரப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை 6.5 சதவிகிதமே இருந்த பசுமைப்பகுதி சமீபத்திய ‘வர்தா’ புயலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வீழ்ந்த நிலையில் 4.5 சதவிகிதமாக குறைந்து விட்டது.
உலகம் வெப்பமயமாதல்- பருவநிலை மாற்றம் இந்நிலையை கருத்தில்கொண்டு, சென்னையில் பசுமையை மீண்டும் மீட்டெடுக்கும் வகையிலும் சிறப்புத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் எக்ஸ்னோரா நிறுவனர் எம்.பி. நிர்மல், மரவங்கி அமைப்பின் நிறுவனர் முல்லை வனம், நடிகர்கள் மயில்சாமி, பாஸ்கர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்கிறார்கள்.
மரம் வளர்ப்பில் மக்களை ஆர்வத்தோடு இணைக்கும் வகையிலும், சைதைப் பகுதியில் வசிக்கும் சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் இத்திட்டத்தில் பங்கேற்கச் செய்திடும் வகையிலும், அவரவர் பிறந்தநாளில், அவரவர் பெயரில் அவரவர் தம் வீட்டருகில் நன்கு வளர்ந்த மரக்கன்று, பாதுகாப்பு வளையத்துடன் அமைத்து கொடுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வேப்பமரம், புங்கை, பூவரசம், அத்தி, நாவல் போன்ற பல்வேறு வகையான மர வகைகள் நடப்படும். மரக்கன்றினை ஒரு வருடகாலம் நல்ல முறையில் தொடர்ந்து பராமரிப்பவர்களுக்கு “ பசுமை பாதுகாவலர்” விருதுகள் வழங்கப்படும்.
ஒரு வருட காலத்திற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் சைதைத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவல கத்தை தொடர்பு கொண் டால் அவர்களிடம் உறுதி மொழி படிவங்கள் பெற்றுக் கொண்டு அவர்கள் வசிக்கும் பகுதியில் மரக்கன்று நட்டுத் தரப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.