செய்திகள்

தி.மு.க.வில் சாதாரண தொண்டர் முதல்-அமைச்சராக முடியுமா? - மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால்

தி.மு.க.வில் சாதாரண தொண்டர் முதல்-அமைச்சராக முடியுமா? என மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். #MKStalin #OPS #ADMK

மாலை மலர்

தேனி:

தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1 லட்சத்து 71 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் நடந்தது. கூட்டத்தில்  துணை முதல்- அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோதும் அதை தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தும் அமல்படுத்தவில்லை. அதன்பிறகு 2014-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று ஜெயலலிதா அமல்படுத்தி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினார்.

தி.மு.க. ஆட்சியில் மதக்கலவரம், சாதி கலவரம் தூண்டிவிடப்பட்டது. தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. என்றைக்கும் நாங்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திகழ்வோம். அது எங்களின் கொள்கை. எந்தச் சூழலிலும் கொள்கையில் இருந்து தடம் மாற மாட்டோம்.

ஜெயலலிதாவின் லட்சிய பாதையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பயணம் செய்வதால்தான் தற்போது தொண்டர்கள் கையில் கட்சியும், ஆட்சியும் உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

ஒரு தொண்டரை தி.மு.க.வில் முதல்- அமைச்சராக்க முடியுமா? ஒரு தொண்டரை தி.மு.க.வில் தலைவராக்க முடியுமா?.  ஆனால், அ.தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டனான என்னை முதல்-அமைச்சராக்கினார் ஜெயலலிதா. தற்போது தொண்டர்களே கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக முடிந்தது. அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டராக இருப்பதே பெருமை.

2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதி யுத்தம் வரப்போகிறது என்பது தி.மு.க.வுக்கு நன்கு தெரியும். அப்போது ஆட்சியில் இருந்த அவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்து இருந்தால் கூட போர் நடந்து இருக்காது. போர் நடந்து கொண்டு இருந்தபோது கருணாநிதி சென்னையில் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு, போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 

இந்த தகவலை தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டு விட்டதாக நம்பி பதுங்கு குழிகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர். அப்போது குண்டுகள் வீசப்பட்டதில் ஒரே இடத்தில் 40 ஆயிரம் குழந்தைகள் செத்து மடிந்தார்கள். அதற்கு கருணாநிதியே காரணம்.

காங்கிரஸ் அரசுதான் இலங்கை அரசுக்கு குண்டுகள் கொடுத்து தமிழர்களை கொன்று குவித்ததாக வைகோ கூறினார். உயிரோடு இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் முதல்வராக விடமாட்டேன் என்று சொன்ன வைகோ தற்போது மு.க.ஸ்டாலினை முதல்வராக்காமல் தூங்க மாட்டேன் என்கிறார். இனிமேல் அவருக்கு வாழ்நாளில் தூக்கமே வராது.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணியாக சேர்ந்துள்ளன. அது, கொள்கை ரீதியான கூட்டணி இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #OPS #ADMK