சென்னை:
டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கவர்னரும், சபாநாயகரும் சேர்ந்து ஜனநாயக படுகொலை செய்து விட்டதாகவும் தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. எம்.எல். ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 89 பேரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க.வின் 89 எம்.எல்.ஏ.க்களும் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ராஜினாமா செய்து நெருக்கடி ஏற்படுத்தலாமா? என்பது பற்றி பேசப்பட்டது.
ஆனால் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யும் திட்டத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. “ராஜினாமா செய்வதால் பயன் எதுவும் இல்லை. அதற்கு பதில் கோர்ட்டை நாடலாம்” என்று பெரும்பாலான எம்.எல்.ஏ.க் கள் தெரிவித்தனர்.
இந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட் டது. எனவே 89 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யும் வியூகம் கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது. அ.தி.மு.க. அரசை வீழ்த்த சட்ட ரீதியாக போராடவும், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவுக்கும் இந்த கூட்டம் தனது முழு ஒப்புதலை அளிக்கும் என்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு பற்றி கோர்ட்டு முடிவை அறிவித்த பிறகு மீண்டும் கூடி விவாதித்து முடிவு எடுக்கலாம்” என்றார். இதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சென்னையிலேயே தங்கி இருக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வேறு என்னென்ன பேசப்பட்டது என்பது குறித்து மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் தகவல்கள் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு விவகாரத்தில் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பை பொறுத்து செயல்பட மு.க.ஸ்டாலின் திட்ட மிட்டுள்ளார். கோர்ட்டில் உரிய நீதி கிடைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த ஸ்டாலின் முடிவு செய்து இருக்கிறார்.
எங்களை எல்லாம் சிறை செல்ல தயாராக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். எனவே கோர்ட்டு தீர்ப்பு சாதகமாக அமையாவிட்டால், தி.மு.க. தொண்டர்களை தட்டி எழுப்பி தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடைபெறும்.
கோர்ட்டு தீர்ப்பு வெளியானதும் மீண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
தமிழக நலனுக்காக ஸ்டாலின் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் அதன்படி செயல்படுவோம். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அதற்காக தயார் நிலையில் இருக்கிறோம்.
இவ்வாறு அந்த தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ. கூறினார்.
இதன் மூலம் கோர்ட்டில் தீர்ப்பு எதிராக அமைந்தால் தி.மு.க. மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.