குன்றத்தூரை அடுத்த தண்டலத்தில் உள்ள குளம் தூர்வாரும் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது பணி முற்றிலும் நிறைவடைந்து உள்ளது.
தூர்வாரப்பட்ட குளத்தை இன்று காலை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் குளத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டது. ஆனால் அதன்பிறகு 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கின்ற அ.தி.மு.க. எந்த குளங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தி.மு.க. சார்பில் நீர்நிலைகளை தூர்வாரி வருகிறோம். தி.மு.க. வெற்றி பெற்ற 89 தொகுதிகளிலும் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை நீர்நிலைகளை தூர் வாரும் பணி நிறைவுபெற்று உள்ளது. இதனை நான் நேரிடையாக சென்று ஆய்வு செய்து வருகிறேன். இந்த பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் தி.மு.க. நிர்வாகிகளின் செயல் பாராட்டுக்குரியது. தலைமையின் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. இந்த பணியில் ஈடுபட்ட பிறகே விழித்துக் கொண்டு அரசின் சார்பில் நாங்களும் தூர்வாரப் போகிறோம் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டு உள்ளார். இதற்காக ரூ. 300 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டதாக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது.
மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் நேரிடையாக சென்று தொடங்கி வைத்தார். ஆனால் அந்த பணி தொடங்கப்பட்ட நிலையிலேயே முடங்கி போய் இருக்கிறது.
பல அணிகளாக பிரிந்து உள்ள ஆளுங்கட்சியினர் எப்படி ஆட்சியை காப்பாற்றி கொள்வது என்று சிந்தித்து வருகிறார்கள். அவர்கள் எந்தப் பணியிலும் ஈடுபடவில்லை. இது வேதனைப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. தி.மு.க. சார்பில் மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
எடப்பாடி பழனிசாமி அரசின் பெரும்பான்மை குறையும்பட்சத்தில் தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்போம்.
குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை அறிவித்த பிறகு தான் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு எடுக்கப்படும் என்று சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்தால் என்ன தவறு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து இருப்பது, ஏற்கனவே பா.ஜனதா, தமிழக அரசை இயக்கி வருகிறது என்று நாங்கள் சொல்லி வருவதை உறுதிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.