செய்திகள்

அமைச்சர்கள் ஊழல் குறித்து கவர்னரிடம் முறையிட்டு எந்த பலனும் இல்லை: மு.க.ஸ்டாலின்

தமிழக அமைச்சர்கள் ஊழல் குறித்து கவர்னரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. எனவே மக்களிடத்தில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மாலை மலர்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம். காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொளத்தூர் தொகுதியில் நான் இன்று முத்து மாரியம்மன் கோவில் குளத்தை தூர்வாரும் பணியை துவக்கி வைத்துள்ளேன்.

இதுகுடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான குளம். அவர்களிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த பணியை மேற்கொள்ளாததால் நாங்கள் அனுமதி பெற்று தூர்வாரும் பணியை தொடங்கி வைத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் குடிநீர் பிரச்சினை பற்றி சிந்தித்து பார்க்கவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சி பொறுப்பில் இருந்த போது பலமுறை குடிநீர் தட்டுப்பாடு வந்துள்ளது.

அப்போது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குளம், குட்டைகளை முன்கூட்டியே தூர்வாரி தண்ணீர் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தவிர எத்தனையோ கூட்டு குடிநீர் திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தி இருக்கிறோம்.

சென்னையில் நெம்மேலி, மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதும் தி.மு.க. ஆட்சிதான்.

ஆனால் இப்போது உள்ள இந்த ஆட்சியில் எந்த ஒரு கூட்டு குடிநீர் திட்டமும் கொண்டு வந்து நிறைவேற்றப்படவில்லை. அதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை.

கே:- சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், ஏரிகள் வறண்டு கிடக்கிறது. தமிழ் நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை எப்படி உள்ளது?

ப:- அரசு நடவடிக்கை பற்றி சொல்ல வேண்டுமானால், மக்களை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை.

அவர்களது கவலையெல்லாம் ஆட்சியை எப்படி காப்பாற்றுவது? யார், முதல்-அமைச்சராக தொடர்வது? கட்சி எப்படி ஒன்றாக சேருவது? அதையும் தாண்டி இன்னும் சொல்ல வேண்டுமானால் ஆட்சி இருக்க கூடிய கால கட்டத்தில் எப்படி கொள்ளையடிப்பது? எப்படி லஞ்சம் வாங்குவது? எப்படி ஊழல் செய்வது என்பதிலேயே முழு கவனமும் உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.89 கோடி பணம் வினியோகத்துக்கான ரசீது எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரூரில் அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் பிடி பட்டது. நோட்டு எண்ணும் மிஷின் கைப்பற்றப்பட்டுள்ளது. மணல் மாபியா சேகர்ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

கே:- டெல்லியில் விவசாயிகள் மீண்டும் 18-ந்தேதி கூடி போராட்டம் தொடங்க இருப்பதாக அய்யாக்கண்ணு கூறி இருக்கிறாரே?

ப:- அதுபற்றி தமிழக அரசும், மத்திய அரசும் கவலைப்படவில்லை. ஆனால் விவசாயிகளுக்கு கவலைப்படும் கட்சியாக தி.மு.க. இருக்கும். அவர்கள் போராட்டம் நடத்தினால் தி.மு.க. பக்கபலமாக இருக்கும்.

கே:- தி.மு.க.வில், கலைஞருக்கு உள்ள அரசியல் நாகரீகம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறை கூறி இருக்கிறாரே?

ப:- நான் அதைப்பற்றி பேசி என் அரசியல் நாகரீகத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை.

கே:- கருணாநிதிக்கு வைர விழா என்ற பெயரில் பா.ஜனதாவுக்கு எதிராக தலைவர்களை ஒன்றிணைக்கும் பணியில் தி.மு.க. ஈடுபடுவதாக பா.ஜனதா தலைவர்கள் குறை கூறுகிறார்களே?

ப:- பா.ஜனதா தலைவர்கள் இதுபற்றி கேட்பதற்கு அருகதை இல்லை. அவர்களை மட்டம் தட்டி பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் திராவிட இயக்கத்தை ஒழிப்பதுதான் முதல் வேலை என்கிறார்கள்.

அப்படி சொல்பவர்களை அழைத்து மேடையில் உட்கார வைத்து அவர்களுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி தர நாங்கள் தயாராக இல்லை.

கே:- தமிழக அமைச்சர்கள் மீது கூறப்படும் புகார்கள் பற்றி ஆளுனரிடம் முறையிடுவீர்களா?

ப:- ஏற்கனவே ஆளுனரிடம் பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மீண்டும் அவரிடம் சென்று முறையிடுவதில் எந்த பலனும் இல்லை. எனவே மக்களிடத்தில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.