விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஏழுசெம்பொன் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
இந்த ஏழுசெம்பொன் கிராமம் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் புகை பிடிப்பது கிடையாது. அதனால் இந்தியாவிலேயே சிறந்த கிராமமாக இது திகழ்கிறது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. மற்றும் கூட்டணி சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிட்டோம். இதில் 39 தொகுதிகளை கைப்பற்றியுள்ளோம்.
உங்களுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். இன்னும் 3 நாட்களில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் நமது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். இங்கு ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பெண்கள் கட்டுப்பாட்டுடன் அமர்ந்து எனது பேச்சை கேட்கிறார்கள். இதன் மூலம் இந்த தொகுதியில் உதயசூரியன் உதிக்கப்போவது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.