சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் நித்யாவின் சகோதரர் பாக்கியராஜ் - ரேவதி திருமணம் இன்று சென்னையில் நடந்தது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-
தலைவர் கலைஞரின் உதவியாளராக, துணையாக, முழுப் பொறுப்பு ஏற்று நித்யா பணியாற்றுகிறார். 2006-ம் ஆண்டு முதல் அமைச்சராக கலைஞர் இருந்தபோது அவருக்கு முதுகுத் தண்டில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு உதவியாக செயல்பட தொடங்கிய நித்யா இன்று வரை தலைவருக்கு பணி விடை செய்து வருகிறார்.
நேற்று மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கூட நித்யா பங்கேற்காமல் கலைஞருடன் இருந்தார். நேற்று மாலை நானும், துரைமுருகனும் கோபாலபுரம் சென்ற போது தலைவருடன் நித்யா இருந்தார். ஏன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று கேட்டேன்.
அதற்கு அவர், கலைஞர் மாலை நேரத்தில் பார்வையாளர்களை சந்திக்க இருப்பார். அந்த சமயத்தில் நான் அருகில் இருக்க வேண்டும்.
காலையில் சற்று நேரம் அயர்ந்து தூங்குவார். அதனால் காலையில் நடக்கும் திருமணத்துக்கு சென்று வந்து விடுவேன் என்றார்.
அதுபோல இப்போது திருமணம் முடிந்ததும் அவர் உடனே புறப்பட்டு சென்று விட்டார். தலைவருக்கு எங்களைப் போன்றவர்கள்தான் பிள்ளைகள் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் நித்யாவும் ஒரு பிள்ளையாக உள்ளார். அதை யாராலும் மறுக்க முடியாது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியும். இந்த திருமணம் ஒரு சுயமரியாதை உணர்வோடு நடந்துள்ள திருமணம்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் சீர்திருத்த திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற சடடம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்மொழிக்கு அந்தஸ்து, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, இந்தி எதிர்ப்பில் முழுமையாக ஈடுபட்டது இவை அனைத்தும் தி.மு.க. ஆட்சியில்தான் நடந்தது.
ஆனால் இன்று சுயமரியாதை எங்கோ போய் கொண்டிருக்கிறது. டெல்லியில் அடமானம் வைக்கக் கூடிய அளவுக்கு சுயமரியாதை போகிறது.
அப்படிப்பட்ட நிலையில் ஒரு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது என்ன பேசுகிறார்கள் என்றால், “நாங்கள் இருவரும் இரட்டை குழாய் துப்பாக்கிகளாக செயல்படுகிறோம்” என்கிறார்கள்.
இரட்டை இலை ஒரு பக்கம், இப்போது இரட்டை குழாயாம். இவர்கள் இரட்டை குழாய் அல்ல. இரட்டை ஊழல் பேர்வழிகளாக உள்ளனர். தமிழகத்தை கொள்ளையடிக்கும் அக்கிரமம் இப்போது நடக்கிறது.
இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும், முடிவு எடுக்கும் சூழ்நிலை மிக விரைவில் வர உள்ளது. அப்படி வரும்போது நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதுதான் நாம் எடுக்கும் சபதமும் உறுதியும் ஆகும்.
விழாவில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், துரை முருகன், ஜெகத்ரட் சகன், பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், தா.மோ.அன்பரசன், எம்.எல். ஏ.க்கள் பல்லாவரம் கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, ரங்கநாதன், சுந்தர், எழிலரசன், தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி, படப்பை மனோகரன், ஜோசப் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைவரையும் நகரச் செயலாளர் இ.கருணாநிதி வரவேற்றார். முடிவில் ரஞ்சன் நன்றி கூறினார்.
நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி, செல்வி, மு.க.தமிழரசு, தயாநிதி மாறன், அமிர்தம், சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், ஜெ.அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.