முக ஸ்டாலின் 
செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின் கோரிக்கை

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

முதல்வரின் சொந்த மாவட்டமாக சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள். அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார்கள். அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிடப்பட வேண்டும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி.

புதுவை துணைநிலை ஆளுநரின் அச்சுறுத்தலைப்புறந்தள்ளி, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானம், சமூகநீதியைக் காப்பாற்றும் இடஒதுக்கீடு தீர்மானம் ஆகிய முக்கியமான தீர்மானங்களை, சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்.

ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலைக் கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் புதுவை முதல்வர்.

‘இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை” என்று கலைஞர் பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.