செய்திகள்

எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி பணம்: ஆதாரத்தை காட்டிய பிறகும் தப்பி ஓட நினைக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்

கூவத்தூரில் நடத்தப்பட்ட ‘குதிரை பேரம்’ குறித்து ஆதாரத்தை காட்டிய பிறகும் ஆளுங்கட்சியினர் தப்பியோட நினைக்கிறார்கள் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர். இது அப்பட்டமாக அம்பலப்பட்டுவிட்டது. மூன் டி.வி., என்ற நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட ‘ஸ்டிங் ஆபரே‌ஷன்’ மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை இந்திய அளவில் பெயர் பெற்றிருக்கும் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில சேனல் வெளியிட்டு, அ.தி.மு.க., ஆட்சியின் லட்சணத்தை நாடு முழுவதும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

கூவத்தூர் முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே, அங்கே தாங்கள் எந்தளவுக்கு விலை பேசப்பட்டோம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அது வீடியோ காட்சிகளாக வெளியான பிறகு வேறென்ன ஆதாரம் வேண்டும்? ஆனால், தன்மான உணர்வு சிறிதுமில்லாத அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் தார்மீக அடிப்படையில் கூட ராஜினாமா செய்ய முன் வரவில்லை. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவும் வாய் திறக்கவில்லை.

ஜனநாயகத்தில் மக்களுக்கு உள்ள அதிகாரம் என்பது வாக்குரிமை. அதனைப் பெற்று ஆட்சி அமைத்தவர்கள், மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளை, ஏலம் விடுவது போல, கூவத்தூர் முகாமில் 2 கோடி, 4 கோடி, 6 கோடி என குதிரை பேரம் நடத்தியிருப்பதைக் கண்கூடாகக் கண்ட பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. பேரவையில் இதுகுறித்து எதிர்கட்சி என்ற முறையில் தி.மு.கழகம் கேள்வி எழுப்பி, விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திய போதும் பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.

நீதிமன்றத்தில் உள்ள விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றார். இதுபோன்ற நிகழ்வுகளில் சட்டமன்றத்தில் ஏற்கனவே விவாதங்கள் நிகழ்ந்திருப்பதையும், அதற்கான சட்டப்பிரிவையும் சுட்டிக்காட்டியும் அவர் ஏற்கவில்லை. “பத்திரிகைச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது, வீடியோ ஆதாரம் இருந்தால் கொடுங்கள்”, என்றார். அந்த ஆதாரத்தையும் சமர்ப்பித்தோம். வீடியோ ஆதாரம் அளித்த பிறகும் சட்டமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக செயல்பட்டு, அதனடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு வெற்றி பெற்றது ஏற்கத்தக்கதல்ல என்பது எதிர்கட்சியான நமது குரல் மட்டுமல்ல, இந்த ஆட்சியை அமைத்த மக்களின் குரலும் அதுதான். தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளின் தலைவர்களும் இதனைத்தான் வலியுறுத்துகிறார்கள்.

கூவத்தூரில் நடத்தப்பட்ட ‘குதிரை பேரம்’ குறித்து முழுமையான விசாரணையும், அதனடிப்படையிலான நடவடிக்கையும் வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தியும், தமிழக மக்களின் பிரதிநிதிகளுக்கான மன்றமாகத் திகழும் சட்டப்பேரவையில், அதுபற்றி விவாதிக்கக்கூட அனுமதிக்கவில்லை என்பது மக்களின் உணர்வுகளை மதிக்காத எதேச்சதிகாரப் போக்கு என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆதாரம் இங்கே இருக்கிறது எனக் காட்டியபிறகு, மான ரோ‌ஷம் உள்ளவர்களாக ஆளுங்கட்சியினர் இருந்தால், தங்கள் மீதான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால், தப்பியோட நினைக்கிறார்கள்.

ஆளுங்கட்சியினரின் குதிரை பேரம் குறித்து பேசியதற்காக வலிமைமிகு எதிர்கட்சியான தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டோம். உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் மறியல் போராட்டம் நடத்தினோம். கைது செய்யப்பட்டோம். இப்படித் தொடர்ச்சியாக, ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்படுகிறதே தவிர, நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு நடத்தப்பட்ட நம்பிக்கை தீர்மானம் பற்றி விவாதிக்க பேரவையில் இடமளிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இதுகுறித்து வலியுறுத்தியபோதும் அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால், எதிர்ப்பினைக் காட்டும் வகையில் வெளிநடப்பு செய்ய வேண்டியதாயிற்று.

பேரவையில் தற்போது நடைபெற்று வருவது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம். இந்த அரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்து விட்டு, பல மாத இடைவெளிக்குப்பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காகப் பேரவையைக் கூட்டியிருப்பது, மரபுகளை மீறிய செயலாகும்.

இருப்பினும், கடன்சுமையில் தமிழகத்தைத் தள்ளிய அ.தி.மு.க., ஆட்சியாளர்களின் அவலம் மிகுந்த நிர்வாகத்தை சுட்டிக்காட்டுவதுடன், தமிழக மக்களுக்கு சிறிதளவேனும் நன்மை கிடைத்திட எதிர்கட்சி என்ற முறையில் கடமையாற்றிடும் வகையில், மீண்டும் மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்று, கேள்விகளை எழுப்பி வருகிறோம்.

மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் நீட் தேர்வு, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகள், பள்ளிக்கல்வித்துறையின் வெற்று அறிவிப்புகள், எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கே அமைப்பது என்பதில் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் செய்து வரும் அரசியல், விவசாயிகளின் தற்கொலைக் கொடூரம், மீனவர்களின் வாழ்வுரிமை பறிப்பு, நியாய விலைக்கடைகளில் உணவுப்பொருள் வழங்குவதில் நடைபெறும் அநியாயங்கள், அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2011-ல் தொடங்கி கடந்த 6 ஆண்டுகளாக 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திட்டங்களின் கதி ஆகியவை உள்ளிட்ட அனைத்தையும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் எழுப்பியபோது, காகிதப்புலிகளாக ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பதிலளிக்கிறார்களே தவிர, தங்கள் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட இதுநாள்வரை முன்வரவில்லை.

‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?’. மக்கள் பயன் பெற்றிருந்தால் தானே, ஆட்சியாளர்களால் சாதனைகளைச் சொல்ல முடியும்? இங்கே நடப்பது சாதனை ஆட்சியல்ல, சமாளிப்பு ஆட்சி! அதுவும், காகிதத் கோட்டை வடிவிலான கண்காட்சி.

அந்தக் கோட்டையைக் காட்டி சட்டமன்றத்தில் சமாளித்து, எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் ஆதாரப்பூர்வமான வாதங்களைப் புறந்தள்ளும் போக்குதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு கழகத்தினரான நமக்குதான் இருக்கிறது.

மக்களுடன் இணைந்து நின்று, மக்களின் கோரிக்கைகளை எடுத்து வைக்கும் வலிமை பெற்ற இயக்கம் நமது திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சியில் இல்லாவிட்டாலும், அரசாங்கம் செய்யத் தவறிய மக்கள் நலப்பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் நடத்தும் நிலையில், கழகத்தின் 89 எம்.எல்.ஏக்களும் நீர் நிலைகளைத் தூர்வாருவதில் தொடங்கி, தமிழகத்தின் எதிர்கால நலன் காக்கும் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். தோழமைக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் நமக்குத் துணை நிற்கிறார்கள். இதனால் தமிழக மக்களிடம் கழகத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதச் செயல்கள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். இந்திய அரசியல் அமைப்புகளுக்குட்பட்ட அதிகார அமைப்புகளில் இதுகுறித்து முறையிட உள்ளோம்.

எல்லாவற்றையும் விட, மக்கள் சக்தியே ஜனநாயகத்தில் மகத்தான சக்தி. அந்த மக்கள் சக்தி, தி.மு.கழகத்திற்கு ஆதரவாக உள்ள நிலையில், இந்த ‘குதிரை பேர’ ஆட்சியை மக்கள் துணையுடன் அகற்ற அணி திரள்வோம். மக்கள் விரும்பும் கழக அரசை ஜனநாயக நெறிமுறைகளின் படி விரைந்து அமைக்க சூளுரைப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.