சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிற ஆட்சியாளர்கள் அண்மையில் ஒரு கொடுமையான சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். அது இந்திய குடியுரிமை திருத்த சட்டம்.
இந்த சட்டத்தை நிறைவேற்றும்போது அதில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அந்த சலுகை கிடைக்கிறதா? அதே போல், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு அந்த சலுகை கிடைக்கிறதா? என்று பார்த்தால் இல்லை.
பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இருந்ததால் அங்கு அந்த மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள்.
ஆனால் மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி கிடையாது. அங்கு தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்து ஓட்டு போட்டது.
ஆனால் அ.தி.மு.க.வுக்கு அங்கு 11 எம்.பி.க்கள் இருந்தனர். பா.ம.க.வின் ஒரு எம்.பி.யைச் சேர்த்தால் 12 பேர். இவர்கள் தி.மு.க.வை போல் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால், இந்த சட்டத்தை அப்போதே நாம் முறியடித்து இருக்க முடியும்.
ஆனால் இவர்கள் மசோதாவை ஆதரித்து ஓட்டு போட்டு விட்டனர். அதனால்தான் இன்று இந்தியாவில் பல இடங்களில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த கலவரத்துக்கு காரணம் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள 12 எம்.பி.க்கள்தான்.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இன்றைக்கு இந்த மசோதாவை எதிர்த்து ஊர்வலம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் முதலில் இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதற்கு பிறகு கழக அமைப்பு சார்பாக உள்ள 65 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்திருக்கிறோம்.
வருகிற 23-ந்தேதி சென்னையில் ஒரு மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். தி.மு.க. மற்றும் கூட்டணி தோழமை கட்சிகளும் ஒருங்கிணைந்து பேரணியை நடத்துகிறோம். இதற்கு எல்லோரும் ஆதரவு தரும்படி நானே வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
இதில் அனைத்துக்கட்சிகள் மட்டுமின்றி பொதுநல அமைப்புகள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறேன். இந்த போராட்டத்தை மிக பிரமாண்ட போராட்டமாக நடத்த இருக்கிறோம்.
இந்த போராட்டத்துக்கு பிறகும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை மிக விரைவில் நடத்துவோம். இதற்கு எல்லா கட்சிகளையும் அழைப்போம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு போயிருக்கிறார். அங்கு நிருபர்கள் பேட்டி கேட்டபோது, சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டிருக்கிறீர்களே? என்று கேட்டதற்கு அது எங்கள் கொள்கை. அதனால் ஓட்டு போட்டோம் என்று கூறி உள்ளார். ஆக அந்த கொள்கை என்ன என்பது தெரிந்து விட்டது.
முதல்-அமைச்சர், நாங்கள் இரட்டை குடியுரிமையை வலியுறுத்துவோம் என்கிறார். அப்படி என்றால் என்ன? இலங்கையில் இருக்க கூடிய தமிழர்களுக்கு, இந்தியா வந்து குடியேறி உள்ள இலங்கை தமிழர்களுக்கு அங்கும் குடியுரிமை இங்கும் குடியுரிமையாம். 2 குடியுரிமையை வலியுறுத்துவோம் என்று சொல்கிறார். இதை எப்படி வலியுறுத்த முடியும்?
இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தில் அது சொல்லப்பட்டுள்ளதா? அதை நிறைவேற்ற முடியுமா? இது கூட முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை. ஏதோ புத்திசாலி போல் சொல்கிறார். எனவே இதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டாலின் பொய் சொல்கிறார். நாங்கள் பொய் சொல்லிதான் ஓட்டு வாங்கி ஜெயித்தோம் என்கிறார். இப்போது போராட்டம் நடத்துவதற்கு மக்களை குழப்புவதற்கு பொய் சொல்லிக் கொண்டிருப்பதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
யார் பொய் சொல்கிறார்கள்? யார் மக்களுக்காக போராடுகிறார்கள்? பாடுபடுகிறார்கள்? என்பது விரைவில் தெரியத்தான் போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.