செய்திகள்

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தி.மு.க. இறுதிவரை போராடும் - மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தி.மு.க. இறுதிவரை போராடும் என்று தனது மே தின வாழ்த்து செய்தியில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MayDay #MKStalin

சென்னை:

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த மே நன்னாளில் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழும் உழைக்கும் சமுதாயத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் தி.மு.க. சார்பில் எனது இதயம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாட்டாளிப் பெருமக்களின் உற்ற தோழனாகத் திகழும் திராவிட பேரியக்கத்தின் சார்பில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை ஆர்வத்தோடு நிறைவேற்றி, தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் காண அயராது பாடுபட்டது என்பதை தொழிலாளர் சமுதாயம் நன்கு உணரும்.

தாராளமயக் கொள்கைகள் தங்குதடையின்றி நாட்டில் நுழைந்த நேரங்களில்கூட, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தலைவர் கருணாநிதி தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோய்விடாமல் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தியதை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து, ‘உழைப்பே உயர்வு’, ‘உழைப்போர் ஒற்றுமை’ என்ற உயர்ந்த சிந்தனைகளுடன் நாள்தோறும் உழைத்திடும் ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம்பெற வேண்டும், வளம்பெற வேண்டும்.

அப்போதுதான் நாடும், நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும் என்பதனைச் சுட்டிக்காட்டி, மீண்டும் எனது மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தி.மு.க. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக என்றைக்கும் முன்னணியில் நின்று, இறுதிவரை போராடும் என்ற உறுதியை தொழிலாளர் சமுதாயத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.