கருணாநிதிக்கு வாழ்த்து சொல்ல மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த காட்சி. 
செய்திகள்

கருணாநிதியின் 94-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் வாழ்த்து பெற்றார்

94-வது பிறந்தநாள், சட்டமன்ற வைர விழாவையொட்டி மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். சிறிது நேரம் கருணாநிதியுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

மாலை மலர்

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்தநாள். சட்டமன்றத்தில் அவர் 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதால் சட்டமன்ற வைர விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நேற்று முதல் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு தொண்டர்கள் அதிக அளவில் வந்தார்கள். நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீட்டு வாசலில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி வீட்டு முன்பு திரண்டு நின்றார்கள். டாக்டர் கலைஞர் வாழ்க என்று அவ்வப்போது கோ‌ஷமிட்டபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

நேற்று இரவு 11.30 மணி வரை கருணாநிதி வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். இன்று காலையிலும் அவர் சுறுசுறுப்புடன் எழுந்து உட்கார்ந்தார். அவரை டாக்டர் கோபால் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

அதன் பிறகு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். சிறிது நேரம் கருணாநிதியுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

இதே போல ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., செல்வி, மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதியின் உடல் நலம் கருதி அவரை வேறு யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கருணாநிதியை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி தனது பிறந்த நாளுக்கு அண்ணா சமாதி, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உடல்நிலை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

கருணாநிதி வீட்டு முன்பு தோரணங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதையும், தொண்டர்கள் குவிந்திருப்பதையும் படத்தில் காணலாம்.

கோபாலபுரத்தில் இருந்த மு.க.ஸ்டலினை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து கருணாநிதிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு சென்றனர். இதே போல கனிமொழி எம்.பி.யிடமும் மகளிர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, பழனி, மாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சப.தங்க வேலன், ரகுபதி, முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, எம்.எல்.ஏ.க்கள், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், ரங்கநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், பல்லாவரம் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, நிர்வாகிகள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, பாலவாக்கம் விஸ்வநாதன், கே.கே.நகர் தனசேகரன், ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, சேப்பாக்கம் சிதம்பரம், சிம்லா முத்துசோழன், வி.என்.ராஜன், முன்னாள் மேயர் சா.கணேசன், வக்கீல் தவசி ராஜன், நெல்லை சரவணன் உள்பட ஏராளமான கட்சி பிரமுகர்களும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்திருந்தனர்.

கருணாநிதிக்கு வாழ்த்து சொல்ல வீட்டு முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் கூட்டம்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள கவர்னர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌ஷணன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர ஜி.கே.வாசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தனர்.