சென்னை:
முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா மரணத்தில் முதல் குற்றவாளிகளாக இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரையும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் மேடையில் வைத்துக்கொண்டு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆளும் அரசுக்கு எதிர்கட்சி ஆலோசனைகளை வழங்காமல் தூற்றுவதிலேயே குறியாக இருக்கிறது. என்று புதுக்கோட்டை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லக் கூட சொந்தக் கட்சியின் சார்பில் கூட்டம் போட முடியாதவர்கள், இப்படி அரசு செலவில் கூட்டம் போட்டு மக்களின் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கி வரும் மு.க.ஸ்டாலினுக்கு உபதேசம் சொல்லும் தகுதி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
“டெங்குவால் 40 பேர் இறந்திருப்பது ஒன்றும் பெரிதல்ல”, என்று மத்திய குழு தமிழக மக்களை அவமானப்படுத்தியும் அதுபற்றி கண்டனம் தெரிவித்தால் பதவிப் பறிபோய் விடும் என்ற அச்சத்தில் இருக்கும், முதல்-அமைச்சர், அரசு விழா மேடையில் ‘அலறுவது’ அழகல்ல.
நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஒத்துழைப்பு வழங்கினார் மு.க.ஸ்டாலின். ஆனால் முதல்-அமைச்சரால் அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்க முடிந்ததா? காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தி.மு.க. ஒத்துழைப்பு வழங்கியது. மத்திய அரசிடம் அந்த மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவு பெற முதல்- அமைச்சரால் முடிந்ததா?
இப்போது டெங்கு காய்ச்சலுக்குக் கூட மாநில அரசு கோரிய நிதியை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதலில் வலியுறுத்தியிருப்பவர் மு.க.ஸ்டாலின்தான்.
மாநில நலன் சார்ந்த பிரச்னைகளில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கி வரும் தி.மு.க.வை பயன்படுத்தி, மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளைப் பெற முடியாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசிவிட்டால் தானும் முதலமைச்சர் என்பதை நிரூபித்து விட முடியுமா?
“என்னை புறக்கணிக்கிறார்கள்”, என்று டெல்லிக்குச் சென்று புலம்பிய கையோடு, புதுக்கோட்டைக்கு வந்த துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “எம்.ஜி.ஆர் விழாவில் உண்மையை பேசுகிறோம், அரசியல் பேசவில்லை”, என்கிறார். டெல்லியில் புகார் கொடுத்ததால், எங்கே தன் பதவியை முதல்-அமைச்சர் பிடுங்கிக் கொள்வாரோ என்ற அச்சத்தின் காரணமாக, அவர் தி.மு.க.வின் மீது பாய்ந்திருக்கிறார்.
தி.மு.க. மீதும், மு.க.ஸ்டாலின் மீதும் குறை கூறுவது, இருக்கின்ற இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்த ‘நடிப்புத் திலகங்கள்’ மேடையில் அரங்கேற்றிய பிரம்மாண்ட நடிப்பாக அமைந்திருக்கிறது.
மு.க.ஸ்டாலுனுக்கு நயவஞ்சக நாக்கு”, என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார். “டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் ஆக நான் இல்லை”, என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இவரது ‘நயவஞ்சகம்’ தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். மூவரும் ஒரே மேடையில் தோன்றி, ‘ஊருக்கு உபதேசம் செய்வது போல்’, “பொறுப்புள்ள அரசு நடத்துகிறோம்”, “மக்கள் அரசாக நடத்துகிறோம்”, என்றெல்லாம் கதையளப்பது, வீண் பேச்சு மட்டுமல்ல அரசு பணத்தில் வெட்டி விளம்பரம் செய்யும் அநாகரீகம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.