செய்திகள்

மழை காலம் வருவதால் மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணம் தாமதம்

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் நவம்பர் 7-ந்தேதி தொடங்க இருந்த மு.க.ஸ்டாலினின் எழுச்சி பயணம் திட்டமிட்டபடி நடைபெறாமல் தள்ளி போகும் என தெரிகிறது.

மாலை மலர்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தலின்போது ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

அதே போல் இப்போது எழுச்சி பயணம் செல்லப்போவதாக அறிவித்தார். நவம்பர் 7-ந்தேதி இந்த பயணத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தார்.

மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி சென்னை வந்து எழுச்சி பயணத்தை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. 6 வாரம் நடைபெறும் எழுச்சி பயணத்தின் நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஆனால் இப்போது எழுச்சி பயணம் திட்டமிட்டபடி நடைபெறாமல் தள்ளி போகும் என தெரிகிறது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதால் தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும். இந்த கால கட்டத்தில் எழுச்சி பயணம் சென்றால் கட்சிக்காரர்கள் சிரமப்படுவார்கள் என்று எடுத்து கூறப்பட்டதாக தெரிகிறது.

மேலும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 31-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடும் என்பதால் மு.க.ஸ்டாலின் அதில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த சமயத்தில் எழுச்சிப் பயணம் செல்வது உகந்ததாக இருக்காது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் எழுச்சி பயணத்தை ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு நடத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.