முக ஸ்டாலின் 
செய்திகள்

காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறவேண்டும் - ஓம் பிர்லாவுக்கு ஸ்டாலின் கோரிக்கை

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி.க்களை சஸ்பெ​ண்ட் செய்து உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமானது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கியது. டெல்லி கலவரம் தொடர்பாக உடனே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை, மாநிலங்களவை  என இரு சபைகளையும் முடக்கி வருகின்றனர்.

இதற்கிடையே, மக்களவை சபாநாயகரின் மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்து, அவர் முன்பு கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று உத்தரவிட்டார்

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்களை சஸ்பெ​ண்ட் செய்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தின் கோவில் பாராளுமன்றம் என அடிக்கடி கூறப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.க. அரசு அதனை மீண்டும் உறுதிசெய்ய வேண்டிய தருணம் இது. மக்களவை சபாநாயகர் உடனடியாக 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் ​மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என பதிவிட்டுள்ளார்.