செய்திகள்

திருவாரூரில் மு.க.ஸ்டாலின் 4-வது நாள் காவிரி மீட்பு பயணத்தை தொடங்கினார்

திருவாரூர் கீழவீதியில் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் 4-வது காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார்.

மாலை மலர்

தி.மு.க. செயல்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்பில் கடந்த 7- ந்தேதி தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து 2-வது நாள் பயணம் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் தொடங்கி, பட்டுக்கோட்டையில் நிறைவு பெற்றது. 3-வது நாளான நேற்று தஞ்சையை அடுத்த அன்னப்பன் பேட்டையில் தொடங்கிய காவிரி உரிமை மீட்பு பயணம் அம்மாப்பேட்டை, அவளிவநல்லூர், குமாரமங்கலம், ஆலங்குடி, நார்த்தாங்குடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நிறைவு பெற்றது.

பயணத்தின் போது மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள், விவசாயிகள், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் தி.மு.க. தொண்டர்கள் புத்தகங்களை பரிசாகவும் கொடுக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று (10-ந் தேதி) 4-வது நாள் பயணத்தை திருவாரூரில் தொடங்கினார்.

காலை 9 மணியளவில் திருவாரூர் கீழவீதியில் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, மதிவாணன் எம்.எல்.ஏ, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருவாரூர் மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, துர்காலயா தெரு வழியாக சென்று காட்டூர், பவித்ரமாணிக்கம், திருக்கண்ணமங்கை, குழிக்கரை, தேவர்கண்டநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார்.


பின்னர் அம்மையப்பன் கிராமத்தில் விவசாயிகள், மாணவர்களை சந்தித்து அவர் பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கமலாபுரத்தில் பயணத்தை தொடங்கி கூத்தாநல்லூர், மன்னார்குடி, கோட்டூர் வழியாக திருத்துறைப்பூண்டியில் பயணத்தை நிறைவு செய்கிறார்.

பின்னர் மாலையில் கோட்டூர், மன்னார் குடி வழியாக திருத்துறைப்பூண்டியில் பயணம் நிறைவடைகிறது.

இதற்கிடையே காவிரி உரிமை மீட்பு 2-ம் குழுவினர் அரியலூரில் இருந்து தொடங்கினர்.

இன்று காலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருவையாறில் மீட்பு பயணத்தை தொடங்குகின்றனர்.