செய்திகள்

சென்னையில் ஏப்.16ல் மு.க.ஸ்டாலின்- கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமையாக்க கோரி சென்னையில் வரும் 16-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவனையில் இணைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் இந்த போராட்டம் குறித்து கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 6-ந்தேதி அன்று நடந்த தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அதாவது, வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அண்மையில் 20.3.2018 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து வடமாநிலங்களில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் பத்துபேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் காயமடைந்தார்கள்.

இந்நிலையில் வடமாநிலங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு, தலித் மக்கள் படுகொலை உள்ளிட்ட அரசு வன்கொடுமைகளைக் கண்டிக்கிற வகையிலும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் 16-ந்தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் தலைவர்களான திருநாவுக்கரசர், கி.வீரமணி, வைகோ, பேராசிரியர் காதர்மைதீன், பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, என்.ஆர்.தனபாலன், எர்ணாவூர் நாராயணன், பொன்குமார் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளைச் சார்ந்த முன்னணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாவரும் பெருவாரியாக பங்கேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.